சிறுமை கண்டு பொங்குவாய்

அவ்வை மொழியில் மானிடப்பிறப்பு
உலகிய உயிர்களில் உயரிய சிறப்பு
அங்ஙனம் கண்டிடில் நமக்கும் பெருமை
மனிதம் மறந்தால் மானிடம் சிறுமை

பல்பொருள் ஈட்டியும், ஓருடல் போற்றியும்
ஒற்றைக்கனியென பிள்ளைகள் பெற்றோர்
பெற்றகம் துறந்தவள் பிரித்தனள் புக்ககம்
இத்தடம் மறந்தும் ஒத்தடம் தேடியும்
பித்தமும் தீர்ந்திட ஒடுங்கிய நாடியும்
ஓரமாய் ஒதுங்கினர் முதியோர் காப்பகம்
பிள்ளையோ, பேரோ, பித்தில்லா பிரியம்
போற்றுவோம் என்றும், தூற்றுவோம் சிறுமை.

‘அவள்’ என்றால் உலகங்கள் திரும்பும்
அவள் சிதைந்தால் பூமி வாய் பிளக்கும்
தீதொன்று அவளினத்திற்கு நேர
அவல நிலைக்கு புவியே மாறும்
அனுசரி என்று சகிப்பது தவறு
கடும் தணல்  தகிப்பதே மரபு
எஃதொன்று அஃதொன்று நேரிட்டால்
சினங்கொண்டெழுவேன் பீறிட்டு
ஆண் என்ற  வக்கிரங்கள் வெறுமை
கண்டிடேன், சகித்திடேன், சிறுமை

மக்களாய் வாழுமின் எங்குண்டு சாதி
காசத்தை போலொரு  விலகாத வியாதி
வலிந்தோரும் நலிந்தோரும் யாதிலும் இருக்க
ஏனின்று சாடுகிறோம் உள்ளங்கள் சிருக்க
இதயங்கள் நோகும் சாதிகள் சாரீர்
உதயங்கள் நிகழ்த்த உழைக்கலாம் வாரீர்
அறிவிலிகள் போற்றும் பிரிவினை மாற்றுவாய்
இறைவனும் தீண்டாத சாதிகள் விரட்டுவாய்
அன்பிற்கு எதிரானால், எதனையும் தாக்குவாய்
சிறுமை கண்டால், பொறுக்காது பொங்குவாய்

– கோ பிரபாகரன்

11 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *