நானும் கடவுள் ஆனேன்

பத்தாவது மாடியில்
எட்டாத உயரத்தில்
பன்னிரண்டு கி.மீ. தூரம்
பகட்டாய் பார்க்க கூடும்

கண்ணாடி மாளிகை தானே
காணாததும் கண்டிடும் இங்கே
ஒரு புறம் நீலமாய் நீரும்
மறு புறம் நீளமாய் ஊரும்
ஒரு சேர பார்ப்பதில் உண்டு
உரைக்க முடியாததோர் இன்பம்
சாலைகள், கோவில்கள் எல்லாம்
கண்ணுக் கெட்டும் கிட்டே
காணும் ஊரே கண்களுக்கு விருந்து
காட்சிகள் எல்லாம் காணச்சிறந்தது

கடலில் அலைகள் காண
அங்கே போக வேண்டாம்
இங்கிருந்தே உணரும் வண்ணம்
சத்தமும் கேட்கும், திண்ணம்
ஊர்வலம் எங்கே என்றால்
அது பார் அங்கே என்பேன்
வாகனம் நின்றது என்றால்
எதுவரை என்பது சொல்வேன்

கடவுள் அருளிய பலதில்
புரிந்தது, உணர்ந்தது சிலவே
எங்கள் அலுவல் என்பதில்
பெரிதொரு பெருமை கொள்வேன்
எட்டா உயரம் இருந்து
காணும் பாக்கியம் தந்தாய்
கிட்டா வண்ணம் நின்றேன்
நானும் கடவுள் ஆனேன்

Author: goprabhakaran

12 thoughts on “நானும் கடவுள் ஆனேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *