2023 – முன்னறிந்தது (Foretold)

தமிழ் நாடு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு (Consortium of Tamil Nadu Political Parties) அமுலுக்கு வந்தது.

கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தனர் மக்கள். எந்த கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த CPP கூட்டமைப்பிற்கு உடன்பட்டே நடக்க வேண்டும். கூட்டமைப்பில் முடிவுகள் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை பெற்ற பின்னரே சாத்தியப்படும். பிறகு கட்சிகள் ஏனென்ற கேள்வி எழலாம். மக்களின் சில பல வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகவோ, அல்லது ஒரு பகுதியின் பிரதிநிதியாகவோ, தங்களின் தேவைகளை முன்வைக்க, மக்களின் முன் தங்களை தனித்து காட்ட கட்சிகள் அனுமதிக்க படுகிறது. இதுவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாட்டின் நலன் கருதி, தனித்துவம் துறந்து பொதுத்துவம் பொலிய கட்சி சாரா CPP கூட்டமைப்பின் மூலம் பொது நலனுக்காகவே செயல்பட வேண்டும். எவரொருவர் தவறென கூட்டமைப்பின் பெரும்பான்மை கருதினாலும், பதவிகள் பறிக்கப்படும், மறுதேர்தல் உடனே நடத்தப்படும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது. மாற்றாக, ஒரு உறுப்பினர் பதவி நீக்கமானாலோ, அல்லது அகால மரணமடைந்ததாலோ, அத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடக்கும். இதனால் பண விரயத்தை தவிர்த்து, வளர்ச்சிப்பணிகளில் கவனமும், பணமும் பயன்படும்.

அரசியல் நிலவரம்

2018ல் இருந்து செயலற்று போயிருந்த பல அரசியல் அமைப்புகள் மக்களால் தவிர்க்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, இரண்டே ஆண்டுகளில் அழிந்தும் போனது. அன்று புதிதாய் முளைத்த இரண்டு கட்சிகளும், மக்களின் நம்பிக்கையை மீட்க முடியாமல், ஜனநாயகம் என்பதன் பழைய முகத்தை உணராமலேயே மடிந்தது. மக்கள் மீதம் இருந்த கோபத்தை NOTA முறையில் வெளிக்கொணர்ந்து, இருந்த பழைய அரசியல் சிப்பந்திகளையும் வீட்டுக்கு அனுப்பினர்.

நிராயுதமாய் இருந்த மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டியதாக பொய் பிரகடனம் செய்த ஆட்சியாளர்களும், அதிகரிகளும் ஆறே மாதங்களில் நீதி பெற்று சிறையில் அடைக்கப்பெற்றனர். அதில், அதி வீரம் காட்டியவருக்கு சங்கு முழங்கியது, மிக சங்கேதமான முறையில். வன்முறையின் விபரீதங்களை முன்பே, தெற்கே இலங்கையில் நடந்த நிகழ்வுகளின் மூலமாக அறிந்திருந்த மக்கள், நன்முறையில் திண்ணமாய் இருந்தனர்.

அரசியல் வல்லுனர்கள், ஜனநாயகம் அல்லாத ஒரு மாற்று வழியில் நாட்டை நடத்த அறியாததால், போன போக்கில் விட்டு, வேடிக்கையே பார்க்க நேர்ந்தது. நிர்வாகம் தடை படாமல் இருக்க, அதிகாரத்துவம் (Bureaucracy) என அரசாங்க உத்தியோகிகளின் கைகளில் ஆட்சி வலுப்பெற்றது. சற்றே அதிகம் சேதம்/ஆதிக்கம் செய்த, அல்லது, அரசு பணத்தை சூறையாடியவர்களை, துரித நீதி மன்றங்கள் மூலம், பொது இடங்களில், தண்டித்தார்கள். வகுப்பு சாராமல், தங்கள் பங்கிற்கு வரவுகள் பார்த்த காவல் துறையும், அரசியல் தலைவர்களின் ஆணைகளால் மட்டுமே இயங்கி பழகியிருந்ததால், அச்சமயம் செயலற்று போயிருந்தனர்.

ஆறு மாதங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மாறிய மக்கள், வரிகளின் மகத்துவம் அறிந்து, முன்வந்து, கணக்காய் கட்டினர். அரசியல்வாதிகளுக்கு நேர்ந்த இழுக்கினையும், தீது செய்து பொது தண்டனைகள் பார்த்த அரசாங்க அலுவலர்களும், தாமாகவே திருத்தப்பட்டு, அலுவல்களை செவ்வனே செய்ய ஆரம்பித்தனர்.

மூன்று வருடங்கள் போயிருக்கும். படபடவென பல அரசியல் தலைவர்கள் இயற்க்கை எய்தினர். ஒரு காலத்தில் தங்களை அரசியல் வாரிசுகளாக கருதிய பலர், முறையாய் தொழில் செய்ய பழகி, பிழைப்பை பார்க்க விழைந்தனர். வாய்ச்சத்தம் குறைந்து, வேலைச்சத்தம் கூட, இறைவனே இயக்குவது போல, இலகுவாக இயக்கங்கள் இசைந்தன. நாடகம், சினிமாவென்று நடித்தவர்களெல்லாம் நல்லவர்கள் என்று நம்பிய மக்கள் மாறினர்.

தாமாக பலர் முன்வந்து சேவைகள் புரிந்தனர். சமூகச்சிந்தனையும், சீரான எண்ணமும் கொண்ட எவரும் ஆட்சிக்கு வரலாம் என்று சமூகம் நிலை நிறுத்தியது. கட்சிகள் தேவையில்லை; இருந்தாலும் இனி அது ஒரு தொல்லை இல்லை என்ற நிலை வந்தது. மக்களின் நன்மைக்காக அல்லாத எதுவும் ஏற்கப்பட மாட்டாது. நண்பர்கள், குழுக்கள், மற்ற கழகங்கள், எதுவாயிருந்தாலும், மக்களுக்கு பயன் தந்தாலொழிய, போற்றப்படாது. மாறாய், தூற்றப்படும், துவைக்கப்படும், தூக்கி எறியப்படும்.

மக்களை மழுங்கடித்த, போதை, புகை, மது, அனைத்தும், மக்களின் கண்டிப்பால், தண்டனையால், ஒடுக்கப்பட்டது. நல்ல முறைகளில் வருவாய் கூடி, அரசு இயங்கவும், புதிய திட்டங்கள் செயல்படுத்தவும் வரவும், செலவும், கணிசமாக கை கோர்ந்து வந்தது. பற்றாக்குறை (Deficit) பட்ஜெட்களையே பார்த்து பழகிய உலக மக்களின் கவனம் தமிழ் நாட்டின் பால் திரும்பியது. மற்ற மாநிலங்களுடனான தொடர்பு, மற்ற நாட்டினர்களிடம் வணிகம் அனைத்தும் CPP மற்றும் அரசு அலுவலர்கள் செவ்வனே செய்தனர். நாட்டிற்கும், மக்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் மாசு செய்யும் எல்லா தொழில்களும் முடக்கப்பட்டு, புதிய நேசமான தொழில்களுக்கும், தொழில் முனைவர்களுக்கும் வழி வகுக்கப்பட்டது.

நீதித்துறை, கிடைத்த மாத்திரத்தில், மக்களின் நன்-மதிப்பிற்கு பாத்திரமானது. நேரம் விரயம் செய்யும் வீண் வாய்த்தாக்கள் வாங்கிய பல வக்கீல் வீணர்களை, Bar – bar செய்தது (புறக்கணித்தது). தமிழ் நாடு சிறப்பு தேர்தல் முறை சட்டம் 2019 (Tamil Nadu Special Electoral Procedure Act 2019) என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்று, தேர்தல்களை தேவைக்கேற்ப மட்டுமே நடத்தும் செயல்முறை அமுலுக்கு வந்தது. தமிழ் நாட்டிலுருந்து நாடாளுமன்றத்திற்கும் CPP கூட்டமைப்பின் சிப்பந்திகள் அனுப்பப்பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்ய சபை உறுப்பினர்களும், ஒரு சேர, ஒரு மொழியாய், தமிழ் நாட்டின் ஒருமித்த எண்ணங்களையே பிரதிபலித்தனர். மத்திய ஆட்சியும் புதுமரியாதையுடன் தமிழ் நாட்டின் பிரதிநிதிகளை கௌரவித்து, தொகுதிகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் பல பதவிகள் கொடுத்தது. அவ்வாறு தங்கள் ஆட்சிக்கும் மாட்சியை சேர்த்தது.

மெதுவாக, நாட்டின் பிற மாநிலங்களும், அவரவர் மக்களின் நன்மதிப்பை வேண்டி ஒழுக்கம் காட்டின. நாட்டு மக்களும், உலக மக்களும், தமிழ் நாட்டின் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கலாயினர். உலகம் முழுவதும், அமேரிக்கா உட்பட, அரசியலில் சன்னமாய், சின்னதாய், தமிழ் நாட்டின் சாயல்கள் தோன்ற துவங்கின. பயம் என்பதன் சீரான செயல்பாட்டை உணர்ந்த மக்கள் இயல்பாகவே தீமைக்கு தீ காட்டி, நன்மையை நாடி போற்றினர்.

ஐந்து வருடங்களில் தமிழகம் கண்ட மாற்றங்களை உலகம் வியந்து பார்த்தது. காரணம் கோரும் பலருக்கும், தமிழகம் கண்ட அநீதிகளின் உச்ச நிலையாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட நிர்பந்திக்கப்பட்டது. மக்கள் தங்களுக்கான மாற்றங்கள் வரப்பெற்றதால், மகிழ்வாக நடந்தனர். கடந்த கால பாடங்களை பீடங்களேற்றி, வரும் சந்ததியினருக்கு தொகுப்பாய், பாடத்திட்டத்தில் சேர்த்து, நடந்தவை திரும்பவும் நிகழாத வண்ணம் உறுதி செய்தனர்.

கனவாக ஏன் காண வேண்டும். கை கூடும் நிகழ்வாக, நிஜமாக ஏன் இவை அமையக்கூடாது. சற்றே சிந்தியுங்கள். இன்றே செயல்படுங்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *