ஞாயிறு விடியல்

ஞாயிறும் மலர
பொழுதும் புலர
உறக்கம் தளர
மயங்கி களித்தேன் !

பதினெண்கீழ் நாடியும்
அத்துணை நரம்பும்
சில்லென சிலிர்க்க,
அறைந்ததே தண்ணீர் !

உடன்பிறந்த மக்களும்
சமவயது சகாக்களும்
இமைவீங்கித் தூங்க,
எனக்கு மட்டும் இன்செயல்!

நானும் விடுவானேன்
இந்நாளில் எழுவானேன்
தரையொற்றி தவழ்ந்தேன்
பாசாங்கில் – உறங்கியபடி !

வெளிறிப்போகும் படி
நீராலே இன்னுமொரு அடி
விடுவதாயில்லை என் சனி
ஞாயிறும் தொடரும் பணி !

நானும் சற்று வியந்தேன்
கருவெண்மையிலும் சிவந்தேன்
அழகாய்த்தான் தெரிந்தேன்
குழிவான அவன் கண்ணாடியில் !

மனதை உணர்ந்தான் போல
தட்டிக்கொடுத்தான் மேலே
நுரையாய் தலையணையாலே
கையால் தழுவ – திளைத்தேன் !

சற்றே அசந்த அந்நேரம்
மறுபடி நிகழ்ந்தது கோரம்
வாளாய் வெட்டியது வீரம்
மறுபடி வீழ்ந்தது என் சிரம் !

என்னிடம் மட்டும் வன்மம்
செத்து தொலையாத சென்மம்
ஒவ்வொரு நாளும் துன்பம்
எனக்கு மட்டுமே இச்சாபம் !

மாடியில் வாழும் தமக்கை
முன்பே வைத்தாள் வழக்கை
நரையுடன் கூடிய வழுக்கை
அவளுக்கு அல்லவோ வாழ்க்கை !

எத்துனை ஆண்டுகள் இருக்கும்
அறியாது இதுவரை எனக்கும்
சானில் என் முழம் சறுக்கும்
பிறந்தேன். வளரவே இம்முழக்கம் !

ஒன்றாய் பிறந்தது பலவே
வஞ்சிக்கப்பட்டது சிலவே
இயற்க்கைக்கு எட்டா உறவே
நானும் உணர்ந்திலேன் அறவே !

மிடுக்காய் பட்டாளம் கண்டவன்
முதிர்ந்தாலும் தவிர்க்க மாட்டான்
காலையில் எழுவது திண்ணம்
கதிரை அறுப்பதாய் எண்ணம் !

ஞானிகள் யோகிகள் எல்லாம்
பெரிதாய் வளர்ப்பது போலே
நானும் பகட்டாய் நீள
பெரிதும் ஆசை கொள்வேன் !

ஞாயிறு விட்டால் என்ன
ஏங்கிப் போவேன் நானும்
குடியா முழுகிப் போகும்
இந்த கிழம் என்று சாகும் !

அழுது புலம்பியது தாடி
உற்ற கிழவனைச் சாடி

கேட்கும் நாதியை தேடி
நாளும் புரண்டது ஓடி !

23 Comments

Leave a Reply to S Ganesh Kumar.. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *